31 மே, 2011

பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள் - ஆமென்!

உறுதிபூசுதல் (Confirmation):
ஒருவரை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரபிரசாதங்களையும் கொடுக்கிற அருள்சாதனம் உறுதிபூசுதல் ஆகும். அதாவது மூவொரு கடவுளில் ஒருவராகிய பரிசுத்த ஆவியையும் அவருடைய வரபிரசாதங்களாகிய ஞானம், புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி மற்றும் தெய்வபயம் ஆகிய ஏழையும் பெற்று கிறிஸ்தவ மதத்தில் நிலைத்து நிற்கும் உறுதியை ஏற்பது தான் இந்த அருள்சாதனம். திருமுழுக்கு, பாவமன்னிப்பு, நற்கருணை ஆகிய மூன்று அருள்சாதனங்களையும் பெற்றவர்கள் தான் இதை பெற முடியும். இந்தவொரு அருள்சாதனம் மட்டும் ஆயரால் (பிஷப்) வழங்கப்படும். 

உறுதிபூசுதல் (Confirmation)

எவ்வாறு வழங்கபடும்?
வழக்கமான திருப்பலியின் மத்தியில் உறுதிபூசுதல் பெற இருப்பவர்களிடம் ஆயர் கேள்விகள் கேட்பார்.

ஆயர்: பசாசை விட்டுவிடுகிறீர்களா? அதன் மாயக் கவர்ச்சியை விட்டுவிடுகிறீர்களா?
எல்லோரும்: விட்டுவிடுகிறேன்.

ஆயர்: வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: அவருடைய ஒரே மகனும் கன்னிமரியாளிடமிருந்து பிறந்து  பாடுபட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தந்தையின் வலது பக்கம் இருப்பவருமான இயேசு கிறிஸ்துவை  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: கத்தோலிக்க திருச்சபையையும், புனிதர்களின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும்  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு மேற்கண்ட கத்தோலிக்க  கிறிஸ்தவத்தின் நம்பிக்கைகளை எல்லோரும் 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று உறுதி ஏற்றுக்கொள்வார்கள். 

அதன் பின்னர் உறுதிபூசுதல் பெற இருப்பவரின் தோளில் ஞானப் பெற்றோர் கை வைக்க, ஆயர் "பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள்" என்று கூறி அவர்களின் நெற்றியில் ஒரு தைலம் கொண்டு சிலுவை அடையாளம் வரைவார். பெறுபவர் ஆமென் என்று சொல்லுவார்.

நற்கருணை மற்றும் உறுதிபூசுதல் போன்ற அருள்சாதனங்கள் பெறுவதற்கு முன் தயாரிப்புக்கான பாடத்திட்டங்கள் உள்ளன. அவற்றைப் படித்து தேர்ச்சி பெற வேண்டும். (தேர்ச்சி பெறாவிட்டாலும் வழங்கப்படும். ஆனால் வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.) இரண்டொரு மாதங்கள் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் நடத்துவதால் சிறுவர்கள்  அவற்றை உள்வாங்கிப் படித்து கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்றியே வளருகிறார்கள், வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். இதுதவிர வாரம் தவறாமல் திருப்பலியும், மறைக்கல்வி என்னும் சமய வகுப்பும் கட்டாயம் என்பதால் அவர்கள் நம்பிக்கையை அவ்வளவு எளிதில் அசைத்து விடக் கூடியதல்ல. அதுவே கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் கிறிஸ்தவ கட்டமைப்பின் வெற்றியும் கூட.

படம்: google.com


லேபிள்கள்: , ,

29 மே, 2011

இது கிறிஸ்துவின் சரீரம் - ஆமென்.

நற்கருணை (Communion):
கோதுமையில் தயாரிக்கப்படும் வெள்ளைநிற அப்பம் நற்கருணை (நன்மை) என அழைக்கபடுகிறது. இந்த வெள்ளை நிற கோதுமை அப்பத்தில் இயேசுவின் பிரசன்னம் இருக்கிறது என்பதும், பாதிரியாரால் நிறைவேற்றப்படும் திருப்பலியின் (பூசை) போது இந்த அப்பம்  இயேசுவின் உடலாகவும், திராட்சை ரசம்  (ஒயின்) இயேசுவின் இரத்தமாகவும்  மாறுகிறது  என்பதும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கைகளுள் ஒன்றாகும்.

முதல் முறையாக ஒருவருக்கு நற்கருணை என்னும் அருள்சாதனம் பெரும்பாலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளிலோ  அல்லது திருவிழாவின் ஏதாவதொரு நாளிலோ நடைபெறும் ஆடம்பர திருப்பலியில் வழங்கப்படுக்கிறது. (மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு திருமணத்தின் போது வழங்கப்படும்.) ஏற்கனவே சொன்னதுபோல எந்தவொரு கத்தோலிக்க கிறிஸ்தவ சிறுவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இந்தவொரு  அருள்சாதனதிற்கு தான். அத்தகைய ஒரு பிரமாண்டப் பொருளாகும். ஒருவர் இதைப் பெறுவதற்கு முன் திருமுழுக்கு மற்றும் பாவமன்னிப்பு பெற்றிருக்க வேண்டும்.

புதுநன்மை (The first Communion)

உச்சி முதல் பாதம் வரை வெள்ளை நிறத்துடனும், கைகளில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியுடனும் சிறுவர்கள் கோயிலில் திருப்பலிக்கு தயாராக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறையுடன் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருக்கையில்  'திருவிருந்து' வழங்கும் நேரத்தில் புதுநன்மை வாங்கும் சிறுவர்களுக்கு அப்பத்தை திராட்சை ரசத்தில் நனைத்து நாக்கில் கொடுப்பார்கள். அதை கொடுக்கும் போது பாதிரியார் "இது கிறிஸ்துவின் திருவுடல்" என்பார்.  "ஆமென்" என்றுச் சொல்லி பெற வேண்டும்.

அவ்வளவு தான். இப்போது நீங்களும் புதுநன்மை பெற்றுவிட்டீர்கள்! இனிமேல் நீங்கள் உலகத்தின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் ஆமென் என்றுச் சொல்லி நன்மை வாங்கிக் கொள்ளலாம்.

பின்னிணைப்பு:
வேளாங்கன்னி, பூண்டி, வில்லியனூர் போன்ற கம்பெனி கோயில்களில் "கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமே நன்மை பெற்றுக்கொள்ளவும்" என பாதிரிகள் ஒலிப்பெருக்கியில் கத்துவதை அங்கே செல்லும் பிற மத மக்களும்  கேட்டிருப்பார்கள்.

சொந்த மத சாமி கைய விரிச்சய பிறகு பக்கத்துக்கு வீட்டு சுவாமிஅடியான் பொண்டாட்டியின் அறிவுரைபடி,  வேளாங்கன்னி மாதா மூலமா ஏசப்பா கிட்ட நம்ம பிரச்சனைய சொல்லி நம்ம பாவத்தையும், கஷ்டங்களையும் தீத்துடலாம்னு அங்க போனா...                                                 பக்கத்து வீட்டு அக்கா சொன்ன மாதிரியே கைல அப்பத்த வச்சிட்டு  "இவரே நம் பாவங்களைப் போக்கும் செம்மறி, இவர தின்னா உங்க பாவம், கஷ்டம் எல்லாம் போய்டும்னு பாதிரியார் சொல்லுறத கேட்டுட்டு...
நாமளும் அத வாங்கி தின்னு நம்ம பாவத்தையும், கஷ்டத்தையும் போக்கிடலாம்னு நினைச்சா....
கொஞ்ச நேரத்துல "இத  வேற யாரும் வாங்க கூடாது, கத்தோலிக்க கிரிச்சவங்க  மட்டும் தான் வாங்கி திங்கணும்" என்று அறிவித்து விடுவதால்....

மறுபடியும் தனது கோயில் கொடைவிழாவில்,  நான் போன வருசமே உனக்கு 2 காப்பு வாங்கி போட்டுருக்கேன். (அழுகை) இன்னும் என் கஷ்டம் தீரல..... "(சாமி - ஆடிக்கொண்டே) அடுத்த கொடைக்குள்ள எல்லாம் சரி ஆகிடும், எனக்கு மால வாங்கி போடு".... திருநீரை அள்ளி தலையில் கொஞ்சம் போட்டு நெற்றியில் ஒரு பூசு பூசி மீதியை கையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே வீட்டிற்குச் செல்லும் எத்தனையோ பொன்னம்மாள்களை நேரில் பார்க்கிறோம்.
அவர்களுக்கு கிறிஸ்தவம் சொல்லும் ஒரே பதில், "நீங்கள் பாவிகள். கிறிஸ்துவை நம்பி மதம் மாறுங்கள்."

படம்: google.com

லேபிள்கள்: , ,

19 மே, 2011

சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன். என்னை மன்னியும்!

ஒப்புரவு (பாவமன்னிப்பு):
"திருமுழுக்குப் பெற்ற பிறகு செய்த பாவங்களை எல்லாம் போக்கும் அருள்சாதனம் ஒப்புரவு" என்கிறது கிறிஸ்தவம். அதாவது, திருமுழுக்குப் பெற்ற பிறகு ஒருவர் தம் மனம் பொருந்தி செய்கிற பாவமாகிய கர்மப் பாவத்தை போக்குவது இந்த பாவமன்னிப்பு. கடவுளின் நேரடி தூதர்களாகிய பாதிரியார்கள் கடவுளின் அனுமதியோடு அவர்களே உருவாக்கி வைத்திருக்கும் பாவமன்னிப்பு என்னும் அருள்சாதனத்தின் வழியாக மக்களின் பாவங்களைக்  கேட்டு தெரிந்துக்கொண்டு மக்களுக்காக  கடவுளிடம் பரிந்து பேசி மன்னிப்பு வழங்குகிறார்கள்!

  
பாவமன்னிப்பு (confession)

ஒருவருக்கு பத்திலிருந்து பன்னிரண்டு வயதில் முதல் முறையாக ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனங்கள் வழங்கப்படுகின்றன. வயதுக்கேற்ற வகையில் பாவங்கள் மாறுபடும் ஆகையால் முதல் முறையாக தனது  பத்து வயதில் ஒரு சிறுவன் என்ன பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்பான்? என்னுடைய முதல் பாவமன்னிப்பு நியாபகத்திலிருந்து,

பொதுவாக, முதலில் எப்படி தொடங்குவது என்பது தான் பெரியப் பிரச்சனை என்பதால் புதியவர்கள் எல்லோருமே அனுபவம் உள்ளவர்களிடம் ஒன்றுக்கு பத்து தடவை கேட்டுத் தெரிந்துக்கொள்வது வழக்கம். அதன்படி,
- முதலில் பாதிரியார் முன்பு முட்டி போட்டு நிற்க வேண்டும்,
- பிதா சுதன் பரிசுத்த ஆவி அடையாளம் வரைய வேண்டும்,
- சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன் என்னை மன்னியும் என்று சொல்ல வேண்டும்.
- அதன் பிறகு என்ன பாவங்கள் செய்தோமோ அதை எல்லாம் சொல்ல வேண்டும்.

என்று வாழையடி வாழையாக அவர்கள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் என் நியாபகத்தில் நிறுத்தி பாதிரியார் முன் முட்டி போட்டு அடையாளம் எல்லாம் வரைந்து முடிந்தது. அதன் பிறகு ஏதோ சொல்ல வேண்டுமே! பயத்தில் மறந்தே விட்டது. யோசித்தால் நியாபகம் வரவில்லை. நிற்கிறேன் நிற்கிறேன் சில நிமிடங்கள் வரை நிற்கிறேன். பாதிரியாரும் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு சத்தமே வரவில்லையே என என்னைப் பார்க்கிறார் (அப்போது தான் என்னை பார்க்கிறார்). நான் பயத்தில் நிற்பதைக் கவனித்து, சரி நீ போ என்று அனுப்பி விட்டார். அதன் பிறகு எனக்குள் நானே ஒருமுறை சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்து விட்டு மீண்டும் அவரிடம் சென்று நிற்கிறேன்.

நான்: (பிதா சுதன் பரிசுத்த ஆவி அடையாளம் வரைந்து விட்டு) சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன். என்னை மன்னியும்.
பாதிரியார்: (அமைதி)
நான்: அம்மா கடைக்குப் போக சொன்னாங்க. போகல.
பாதிரியார்: (அமைதி)
நான்: பொய் சொன்னேன்.
நான்: கெட்ட வார்த்தை சொன்னேன்.
பாதிரியார்: என்ன வார்த்தை?
நான்: (அமைதி!)
பாதிரியார்: (அமைதி)
நான்: (கொஞ்ச நேர அமைதிக்குப் பின்) பு வச்சி.....
பாதிரியார்: (அமைதி)
நான்: (யோசித்து...) ஒழுங்கா படிக்க மாட்டேன்.
பாதிரியார்: (அமைதி) சரி. இதெல்லாம் பெரிய பாவம் இல்ல. ஆனா அம்மா அப்பா சொல்லுறத கேட்டு நடக்கணும். ஒழுங்கா படிக்கணும். கெட்ட வார்த்தை பேச கூடாது..... (ஏதோ செபித்த பிறகு, என்னை நோக்கி சிலுவை அடையாளம் வரைந்து விட்டு...). பரிகாரமாக ஐந்து முறை கர்த்தர் கற்பித்த செபம் சொல்லச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே சொன்னது போல, நற்கருணை என்னும் அப்பத்தை வாங்கிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் இருக்கும் சிறுவருக்கு இந்த பாவமன்னிப்பு என்பது பெரிய விடயமே அல்ல. அடுத்தநாள் அப்பம் வாங்க இருக்கும் ஆர்வத்தில் ஒருபகுதி கூட பாவமன்னிப்பு பெறுவதில் இருப்பதில்லை. ஆனால் திருச்சபை சட்டப்படி பாவமன்னிப்பு பெறாமல் அப்பம் வாங்க முடியாது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ பாவமன்னிப்பு பெறுகிறார்கள். முதல் முறையோடோ அல்லது கொஞ்சம் விபரம் வரும் வரையோ  தான் பாவமன்னிப்பு புழக்கத்தில் இருக்கிறது. பாவமன்னிப்பின்  போது பாதிரியாரிடம் "நான்  கை அடிச்சேன்" என்று சொல்லக்கூடிய  அளவிற்கு ஞானப் பழங்கள் இன்னும்  இருக்கிறார்கள் என்றாலும், இன்றைய நிலவரப்படி பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பதில்லை. அதற்கான காரணத்தை அவரவர் மனசாட்சியே சொல்லும். இன்னும் சில காலத்திற்குப் பிறகு பாவமன்னிப்பு என்கிற "சம்பிரதாயம்" இல்லாமல் கூட போய்விடலாம்(?) என்பதால் இப்போதைக்கு இந்த விபரங்கள் போதும் என நினைக்கிறன் .

அடுத்த பதிவில்: நற்கருணை (Communion)


 (படம்: desertpastor.com)

லேபிள்கள்: , ,

17 மே, 2011

மீண்டும் வருவார்?

அன்பு செய் என்றதற்காய்

கள்வனைப் போல் கைது செய்து
முகத்தில் அறைந்து எச்சில் உமிழ்ந்து
தலையில் முள்முடி யடித்து
என்னாடை களைந்து நிர்வாணமாக்கி
அவமானச் சிலுவையில் தொங்கவிட்டு 
என்னுதிரஞ்சொட்ட உயிரை பறித்தாயே மனிதா!

மீண்டு(ம்) வா வென்று கெஞ்சித்து அழைக்கிறாய் - 
ஈராயிரமாண்டுகளாய்,
எத்தனை வன்மமுன் நெஞ்சில்!
இனி என்னால் ஒருபோதும் வரமுடியாது.
மன்னித்துவிடு.

லேபிள்கள்: ,

16 மே, 2011

ஜென்மப் பாவத்திலிருந்து கருமப் பாவத்திற்கு!

திருமுழுக்கின் வழியாக ஒரு குழந்தையின் பிறவிப் பாவம் மற்றும் அதன் மீதிருந்த பிசாசுகள் விரட்டப்பட்டு கிறிஸ்தவக் குழந்தையாக மாற்றப்படுகிறது. இனி திருமுழுக்கின் போது பாதிரியார் கேட்டுப்பெறும் உறுதிமொழியின்படி பெற்றோர் அக்குழந்தையை கிறிஸ்தவ நெறிப்படி வளர்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக கிறிஸ்தவம் வகுத்துள்ள அடுத்த அருள்சாதனமான ஒப்புரவு (பாவமன்னிப்பு) மற்றும் நற்கருணை வழங்கப்படும்.

பொதுவாக திருமுழுக்கிற்கும் ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனத்திற்குமிடையே கிட்டத்தட்ட 10 வருட இடைவெளி இருக்கிறது. ஒருவரை கிறிஸ்தவத்தில் நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டி பலவித அயோக்கியத்தனங்களையும் கடவுளின் பெயரால் உருவாக்கும் திருச்சபையின் ஆட்சியாளர்கள், அதனை மிக விரிவாகத் திட்டமிட்டு  கன கட்சிதமாக செயல்படுத்தும் காலக்கட்டம் இதுதான்.

ஒரு குழந்தை சரியாகப் பேசுவதற்கு முன்பு "மூக்க அறுத்துருவேனு சொல்லு, கொன்னுபுடுவேணு சொல்லு" என்று சைகை காட்டச்சொல்லி வேடிக்கை வன்முறையை கற்றுத்தரும் பெற்றோர்கள் கூடவே "ஏசப்பா பாரு, ஏசப்பாக்கு முத்தம் கொடு, கை கும்பிடு" என்று தங்களின் மத நம்பிக்கையையும்  குழந்தைக்கு கற்றுத்தருகிறார்கள். காலையில் உறங்கி எழும்போது, குளிக்கும் போது, சாப்பிடும் போது, பேருந்து புறப்படும் போது தொடங்கி இரவில் உறங்கச செல்லும் முன்பு வரை பிதா சுதன் பரிசுத்தஆவி அடையாளம் வரையவும்  கற்றுத்தருகிறார்கள். காலப்போக்கில் இவைகள் அனிச்சை செயலாகவும் மாறிவிடுகிறது. கோயிலுக்கு மத்தியில் சிலுவையில் தொங்கியபடி மிகக் குரூரமாக காட்சித்தரும் இயேசு குழந்தையின் பால்குடி மறக்கும் முன்னரே அதன் நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்படுகிறார்.

பள்ளிக்குச் செல்லும் பருவம் வருவதற்கு முன் அம்மாவின் இடுப்பிலோ அப்பாவின் தோளிலோ சவாரி செய்யும் குழந்தைகள்  பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பெற்றோரின் துணையின்றி கோயிலுக்குச் செல்லவும், அங்கு அவர்களின் வயதுக்கேற்றார் போல நடக்கும் குழுக்கள், இயக்கங்கள், சபை கூட்டங்களில் கலந்துக்கொள்ளவும் வற்புறுத்தப்படுகிறார்கள். மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் நடக்கும் மறைகல்வி என்னும் சமய வகுப்பில் கலந்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுபோக சிறுவர்கள் திருப்பலியின் போது பேசினாலோ, பக்கத்தில் விளையாடினாலோ அவர்கள் பாதிரியாரின் சாபத்திற்கு ஆளாவார்கள். சொல்பேச்சு கேட்காத குழந்தை சாத்தானின் குழந்தை எனவும், பாவி எனவும் அடையாளப்படுத்தபடுகிறது. மட்டுமல்லாமல் "வளர்ப்பு சரியில்லை" என்று அத்தனைபேர் முன்னாலேயும் அச்சிறுவர்களின்  பெற்றோர்களை பாதிரியார் அவமானப்படுத்துவார். சில நேரங்களில் சிறுவர்களுக்கு மண்டையில் குட்டும் கிடைக்கும். பலபேர் முன்பாக தானும் தன்னுடைய குழந்தைகளும் அவமானப்படுத்தப்படுவதை தவிர்க்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை அன்பாலும் அதட்டியும் அமைதியாக இருக்கும்படி பயிற்றுவிப்பார்கள்.

கோவிலில் பாதிநேரம் உறக்கமும், மீதிநேரங்களில் விளையாட்டுமாக இருக்கும் சிறுவர்கள் நாளடைவில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறார்கள். தனது வயதுக்கு சற்றே மூத்த சிறுவர்கள்  பாதிரியாருக்கு சமமாக கோயில் பீடத்திலே இருப்பதையும், பாதிரியார் பீடத்திற்கு வரும் போதும் போகும் போதும் திரைசீலையை தூக்கிப் பிடிப்பதையும், பாதிரியார் இருக்கையில் அமரும் போது நிற்கும் போது என்று அவர் செல்லும் திசைக்கெல்லாம் மின்விசிறியை திருப்புவதையும், அவருக்கு உதவியாக பீடத்திலே இருப்பதையும், மணி அடிப்பது, தூபம் காட்டுவது, காணிக்கைப் பொருட்களை வாங்கி வைப்பது என்று பல வேலைகள் செய்வதையும் பார்க்கிறார்கள். மேலும் திருப்பலியின் போது இயேசுவின் உடல் என்று கொடுக்கப்படும் கோதுமை அப்பத்தை ஒவ்வொருவரும் வரிசையில் நின்று வாங்கி அதை நோகாமல் பல் படாமல் பக்தி சிரத்தையோடு தங்கள் வாயில் போடுவதையும் கவனிக்கிறார்கள்.

இவைகளையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிறுவர்கள் தானும் தனக்கு மூத்தவர்களைப் போல பீடத்தில் நிற்கும் தகுதியைப் பெறவும், எல்லோரையும் போல வரிசையில் நின்று அப்பம் வாங்கும் தகுதியைப் பெறவும் கிறிஸ்தவம் கட்டமைத்துள்ள இந்த ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனங்களைப் பெற ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

தொடரும்...

லேபிள்கள்: , ,

4 மே, 2011

கிறிஸ்தவர்களின் குழந்தைகள் குட்டிச்சாத்தான்கள்! - 2

கிறிஸ்தவம் ஆளுவோர் - ஆளப்படுவோர் என்ற இரு நிலைகளைக் கொண்டது என்றும், திருச்சபை உருவாக்கி வைத்திருக்கும் ஏழு அனுமானங்களால் கிறிஸ்தவன் கட்டமைக்கப்படுகிறான் என்றும், அதில் முதல் நிலையான திருமுழுக்கு எவ்வாறு கோயிலில் வழங்கப்படுகிறது என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். இனி, திருமுழுக்குப் பற்றி கிறிஸ்தவம் என்ன கூறுகிறது என்பதைக் காணலாம்.

திருமுழுக்கு எதற்காக?
"சென்மப் பாவத்தையும், கர்மப் பாவத்தையும் போக்கி, கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற அருட்சாதனம் திருமுழுக்கு" என்று வரையறுக்கிறது கிறிஸ்தவம். அதாவது, எந்தவொரு மனிதனும் இவ்வுலகில் பிறக்கும் போது சென்மப் பாவியாக பிறக்கிறான், அவன் கிறிஸ்தவனாக மாறவேண்டும் என்றால் அந்த சென்மப்பாவத்தை களைந்தவனாக இருக்க வேண்டும். திருமுழுக்குப் பெறாத எவரும் கிறிஸ்தவரல்ல. ஒருவர் எப்போது திருமுழுக்குப் பெறுகிறாரோ அதுமுதல் தான் அவர் கிறிஸ்தவராக திருச்சபையில் அங்கீகாரம் பெறுகிறார். அந்தவகையில் கிறிஸ்தவர் ஒருவருக்குப் பிறந்துவிடுவதால் மட்டும் ஒரு குழந்தை கிறிஸ்தவக் குழந்தையாக ஆகிவிடாது. இதைதான் "கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற" என்று கிறிஸ்தவம் மிகத்தெளிவாக கூறுகிறது. 

சென்மப் பாவம் என்றால் என்ன?
முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் மூலம் உண்டாகி தொடர்ந்து இன்று வரைக்கும் மனிதர்கள் கூடவேப் பிறக்கும் பாவம் சென்மப் பாவம்!

அதாவது, ஆதாம் ஏவாள் மூலம் உண்டாகிய சென்மப்பாவத்தை போக்குவதும் திருமுழுக்கு தான்.அதற்கு அடையாளமாகத தான் இன்றுவரையிலும் திருமுழுக்கின் போது குழந்தையை பேய் பிடித்திருப்பதாகக் கூறி பேய் ஓட்டுகிறார்கள். பாவத்தை விட்டுவிடுகிறாயா? சாத்தானை விட்டுவிடுகிறாயா? என்று கேட்கிறார்கள். எண்ணெய் பூசுகிறார்கள், காது கேட்கவும், வாய் பேசவும் அருள் வழங்குகிறார்கள். ஆனால் பாவம் கிறிஸ்தவர்கள்! யார் யாரோ செய்த பாவங்களுக்கெல்லாம் இன்றும் தண்டனை அனுபவிக்கிறார்கள். என்னதான் கிறிஸ்தவம் கற்றுக்கொடுத்தது போல செபித்தாலும், புண்ணிய வாழ்வு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறப்பது என்னவோ குட்டிச்சாத்தான்கள் தான்! எந்தவொரு பெற்றோருமே தனது குழந்தைக்கு ஏன் பேய் ஓட்டவேண்டும் என்று கேட்பதில்லை. தான் பெற்றெடுக்கும் குழந்தை ஒரு பாவி என்று கிறிஸ்தவம் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். மூடநம்பிக்கை ஒரு மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கிறது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் பாவங்கள் பெருகிவிட்டிருந்ததால் அப்பாவத்திலிருந்து மக்களை மீட்க கடவுளே மனிதனாக இயேசு என்னும் பெயரில் பிறந்ததாகவும், இறுதியில் அந்த கடவுளாகிய இயேசு இவ்வுலகத்தை பாவங்கள் அனைத்திலுமிருந்தும் மீட்டதாகவும் கிறித்தவம் கூறுகிறது. ஆனால், பாவம் அந்த கடவுளால் கூட இந்த ஆதாம் ஏவாள் செய்த பாவத்தை மட்டும் போக்க முடியவில்லை. அதனால் தான் இன்று பிறக்கும் குழந்தையும் சென்மப்பாவியாக பிறக்கிறது என்று இவர்களால் கூசாமல் புழுக முடிகிறது. 

இயேசு பாவங்கள் அனைத்திலுமிருந்தும் மீட்டார் - சென்மப்பாவத்தை போக்க திருமுழுக்குப் பெறவேண்டும். ஏன் இத்தனைப் பெரிய முரண்பாடு?

கிறிஸ்தவர்கள் சிந்திக்க:
1. உங்கள் குழந்தை சென்மப்பாவத்தோடே பிறக்கிறது என்று திருச்சபை சொல்லுவதை நம்புகிறீர்களா?
2. உங்கள் குழந்தைக்கு அதன் மதத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது மதமே இல்லாமல் வாழவும் உரிமை உள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
3. அப்படியென்றால் திருமுழுக்கு என்பது உங்களை அடிமையாக்கி, திருச்சபை ஆட்சியாளர்களின் கட்டுக்குள் வைத்திருக்க ஏற்படுத்தியிருக்கும் ஒரு அனுமானம் என்பதை உணர்ந்துவிட்டீர்கள் தானே!

பாசிஸ்ட்

3 மே, 2011

கிறிஸ்தவர்களின் குழந்தைகள் குட்டிச்சாத்தான்கள்! - 1

"கடவுளின் மக்களாகிய திருச்சபை தனது அமைப்பிலே திருச்சபை ஆட்சியாளர், பொது நிலையினர் எனும் இரு நிலைகளைக் கொண்டதாய்க் காணப்பெறுகின்றது" என்கிறார் கோட்பாட்டியல் பேராசிரியர் ஏ.எம்.லூர்துசாமி சே.ச. இங்கு, ஆண்டான் - அடிமை என்பதைத்தான் திருச்சபைக்கு உட்பட்டு ஆட்சியாளர் - பொதுநிலையினர் என்ற வார்த்தை ஜாலத்தால் குறிப்பிடுகிறார், என்றாலும் திருச்சபை ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற இரு நிலைகளைக் கொண்டதாய் இருப்பதை மட்டுமே இங்கு நாம் புரிந்துக்கொண்டால் போதுமானது. பொதுவாக ஒரு கிறிஸ்தவப் பெற்றோருக்கு பிறந்த குழந்தையை அதன் பிறப்பு முதல் இறப்பு வரை திருச்சபை தனது கீழ்கண்ட ஏழு அனுமானங்களைக் கொண்டு கட்டமைக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அவைகள் முறையே,
1. திருமுழுக்கு (ஞானஸ்நானம்), 2. ஒப்புரவு, 3.  நற்கருணை, 4. உறுதிபூசுதல், 5. குருத்துவம் அல்லது 6. திருமணம் மற்றும் 7. நோயில்பூசுதல். இதில் குருத்துவம் ஏற்பவர் ஆட்சி செய்பவராகவும், திருமணம் செய்பவர் ஆளப்படுபவராகவும் இருக்கிறார். முதலில் ஆட்சியாளர்களால் பொதுநிலையினருக்கு திருமுழுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது? என்பதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் திருச்சபை திருமுழுக்குக்கு சொல்லும் விளக்கம் என்ன? என்பதைக் காணலாம்.

திருமுழுக்கு:
கிறிஸ்தவப் பெற்றோர்கள் தனது குழந்தைக்கு பெயர் வைக்க திருமுழுக்கு என்னும் சடங்கை நிறைவேற்றுகிறார்கள். திருச்சபை வழக்கப்படி திருமுழுக்கு வேண்டி வருபவர்கள் வெள்ளை உடை, மெழுவர்த்தி மற்றும் பெற்றோரை அடுத்து குழந்தையை கிறிஸ்தவக் கட்டளைப்படி வளர்க்க உறுதியளிக்கும் ஒரு ஞானப்பெற்றோர் சகிதம் அச்சடங்குக்கு தயாராக கோயிலுக்கு செல்லவேண்டும். கோயிலில் ஒரு குழந்தைக்கு எவ்வாறு திருமுழுக்கு அளிக்கப்படுகிறது?
  • முதலில், குழந்தைக்கு பெற்றோர் வைக்க இருக்கும் பெயரை பாதிரியார் கேட்டுத் தெரிந்துகொள்வார்.
  • பின்னர் கிறிஸ்தவராக மாற திருமுழுக்கு பெற்றுக்கொள்ள குழந்தையின் பெற்றோருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வார்.
  • அடுத்து திருமுழுக்குப் பெறயிருக்கும் குழந்தையிடம் உள்ளப் பேயை விரட்ட பேய் ஓட்டும் செபத்தை பாதிரியார் செபிப்பார்.
  • திருமுழுக்கு பெறுவதற்கு ஆயத்தமாக மீட்பின் எண்ணெய் அக்குழந்தைக்கு பூசப்படும்.
  • தொடர்ந்து திருமுழுக்குப்பெறும் குழந்தையிடம் "பாவத்தை விட்டுவிடுகிறாயா?", "சாத்தானை விட்டுவிடுகிறாயா?" என்று பாதிரியார் கேட்பார். அதற்கு குழந்தையின் சார்பாக அதன் பெற்றோர் "விட்டுவிடுகிறேன்" என்று பதிலளிப்பார்கள்.
  • அதுவரையிலும் சென்மப் பாவியாக, சாத்தானின் பிள்ளையாக இருந்த அக்குழந்தை அதன் பிறகு கிறிஸ்தவக் குழந்தையாக, பேய் விரட்டப்பட்ட குழந்தையாக மாறுகிறது.
  • அதன் அடையாளமாக கிறிஸ்மா என்றொரு தைலம் பூசுவார்கள்.
  • பாவத்திலிருந்து விடுபட்டதற்கு அடையாளமாக குழந்தைக்கு வெள்ளை ஆடை அணியப்படும்.
  • இருளிலிருந்து ஒளிக்கு வந்ததற்கு அடையாளமாக மெழுகுவர்த்தி எரியச் செய்யப்படும்.
  • அதன் பிறகு குழந்தையின் காதுகள் திறக்கப்பட, வாய் பேச பாதிரியார் ஒரு மந்திரத்தை செபிப்பார்! பின்பு ஆசி வழங்கி திருமுழுக்கு நிறைவுபெறும்.
பொதுவாக கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை திருமுழுக்கு என்பது தனது குழந்தைக்கு பெயர்வைக்கும் விழா. அதனால் தான் இன்று உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் அனைவரையும் அழைத்து விருந்தளித்து மிக ஆடம்பரமான விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் திருமுழுக்கு என்பதற்கு திருச்சபை தரும் விளக்கமே வேறுவிதமாக இருக்கிறது. மேலே பார்த்தது போல, கிறிஸ்தவராக மாற விருப்பம் இருக்கிறதா என்று எதற்காக உறுதி ஏற்கச்செய்கிறார்கள்? யாதுமறியா பிஞ்சுக் குழந்தைக்கு ஏன் பேய் ஓட்டவேண்டும்? சென்மப்பாவம் என்றால் என்ன? என்பதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

பாசிஸ்ட்

லேபிள்கள்: , ,