19 மே, 2011

சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன். என்னை மன்னியும்!

ஒப்புரவு (பாவமன்னிப்பு):
"திருமுழுக்குப் பெற்ற பிறகு செய்த பாவங்களை எல்லாம் போக்கும் அருள்சாதனம் ஒப்புரவு" என்கிறது கிறிஸ்தவம். அதாவது, திருமுழுக்குப் பெற்ற பிறகு ஒருவர் தம் மனம் பொருந்தி செய்கிற பாவமாகிய கர்மப் பாவத்தை போக்குவது இந்த பாவமன்னிப்பு. கடவுளின் நேரடி தூதர்களாகிய பாதிரியார்கள் கடவுளின் அனுமதியோடு அவர்களே உருவாக்கி வைத்திருக்கும் பாவமன்னிப்பு என்னும் அருள்சாதனத்தின் வழியாக மக்களின் பாவங்களைக்  கேட்டு தெரிந்துக்கொண்டு மக்களுக்காக  கடவுளிடம் பரிந்து பேசி மன்னிப்பு வழங்குகிறார்கள்!

  
பாவமன்னிப்பு (confession)

ஒருவருக்கு பத்திலிருந்து பன்னிரண்டு வயதில் முதல் முறையாக ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனங்கள் வழங்கப்படுகின்றன. வயதுக்கேற்ற வகையில் பாவங்கள் மாறுபடும் ஆகையால் முதல் முறையாக தனது  பத்து வயதில் ஒரு சிறுவன் என்ன பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்பான்? என்னுடைய முதல் பாவமன்னிப்பு நியாபகத்திலிருந்து,

பொதுவாக, முதலில் எப்படி தொடங்குவது என்பது தான் பெரியப் பிரச்சனை என்பதால் புதியவர்கள் எல்லோருமே அனுபவம் உள்ளவர்களிடம் ஒன்றுக்கு பத்து தடவை கேட்டுத் தெரிந்துக்கொள்வது வழக்கம். அதன்படி,
- முதலில் பாதிரியார் முன்பு முட்டி போட்டு நிற்க வேண்டும்,
- பிதா சுதன் பரிசுத்த ஆவி அடையாளம் வரைய வேண்டும்,
- சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன் என்னை மன்னியும் என்று சொல்ல வேண்டும்.
- அதன் பிறகு என்ன பாவங்கள் செய்தோமோ அதை எல்லாம் சொல்ல வேண்டும்.

என்று வாழையடி வாழையாக அவர்கள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் என் நியாபகத்தில் நிறுத்தி பாதிரியார் முன் முட்டி போட்டு அடையாளம் எல்லாம் வரைந்து முடிந்தது. அதன் பிறகு ஏதோ சொல்ல வேண்டுமே! பயத்தில் மறந்தே விட்டது. யோசித்தால் நியாபகம் வரவில்லை. நிற்கிறேன் நிற்கிறேன் சில நிமிடங்கள் வரை நிற்கிறேன். பாதிரியாரும் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு சத்தமே வரவில்லையே என என்னைப் பார்க்கிறார் (அப்போது தான் என்னை பார்க்கிறார்). நான் பயத்தில் நிற்பதைக் கவனித்து, சரி நீ போ என்று அனுப்பி விட்டார். அதன் பிறகு எனக்குள் நானே ஒருமுறை சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்து விட்டு மீண்டும் அவரிடம் சென்று நிற்கிறேன்.

நான்: (பிதா சுதன் பரிசுத்த ஆவி அடையாளம் வரைந்து விட்டு) சுவாமியே! நான் பாவியாய் இருக்கிறேன். என்னை மன்னியும்.
பாதிரியார்: (அமைதி)
நான்: அம்மா கடைக்குப் போக சொன்னாங்க. போகல.
பாதிரியார்: (அமைதி)
நான்: பொய் சொன்னேன்.
நான்: கெட்ட வார்த்தை சொன்னேன்.
பாதிரியார்: என்ன வார்த்தை?
நான்: (அமைதி!)
பாதிரியார்: (அமைதி)
நான்: (கொஞ்ச நேர அமைதிக்குப் பின்) பு வச்சி.....
பாதிரியார்: (அமைதி)
நான்: (யோசித்து...) ஒழுங்கா படிக்க மாட்டேன்.
பாதிரியார்: (அமைதி) சரி. இதெல்லாம் பெரிய பாவம் இல்ல. ஆனா அம்மா அப்பா சொல்லுறத கேட்டு நடக்கணும். ஒழுங்கா படிக்கணும். கெட்ட வார்த்தை பேச கூடாது..... (ஏதோ செபித்த பிறகு, என்னை நோக்கி சிலுவை அடையாளம் வரைந்து விட்டு...). பரிகாரமாக ஐந்து முறை கர்த்தர் கற்பித்த செபம் சொல்லச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே சொன்னது போல, நற்கருணை என்னும் அப்பத்தை வாங்கிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் இருக்கும் சிறுவருக்கு இந்த பாவமன்னிப்பு என்பது பெரிய விடயமே அல்ல. அடுத்தநாள் அப்பம் வாங்க இருக்கும் ஆர்வத்தில் ஒருபகுதி கூட பாவமன்னிப்பு பெறுவதில் இருப்பதில்லை. ஆனால் திருச்சபை சட்டப்படி பாவமன்னிப்பு பெறாமல் அப்பம் வாங்க முடியாது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ பாவமன்னிப்பு பெறுகிறார்கள். முதல் முறையோடோ அல்லது கொஞ்சம் விபரம் வரும் வரையோ  தான் பாவமன்னிப்பு புழக்கத்தில் இருக்கிறது. பாவமன்னிப்பின்  போது பாதிரியாரிடம் "நான்  கை அடிச்சேன்" என்று சொல்லக்கூடிய  அளவிற்கு ஞானப் பழங்கள் இன்னும்  இருக்கிறார்கள் என்றாலும், இன்றைய நிலவரப்படி பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பதில்லை. அதற்கான காரணத்தை அவரவர் மனசாட்சியே சொல்லும். இன்னும் சில காலத்திற்குப் பிறகு பாவமன்னிப்பு என்கிற "சம்பிரதாயம்" இல்லாமல் கூட போய்விடலாம்(?) என்பதால் இப்போதைக்கு இந்த விபரங்கள் போதும் என நினைக்கிறன் .

அடுத்த பதிவில்: நற்கருணை (Communion)


 (படம்: desertpastor.com)

லேபிள்கள்: , ,

4 கருத்துகள்:

21 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:10 க்கு, Blogger superlinks கூறியது…

வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

 
21 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:30 க்கு, Anonymous பாசிஸ்ட் கூறியது…

மிக்க நன்றி தோழர்!

 
22 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:30 க்கு, Blogger ராஜன் கூறியது…

ஹ்ம்ம்ம்! கிளப்புங்கள்!

 
30 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:56 க்கு, Anonymous dravidan கூறியது…

CLICK AND READ

===>ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள் <===

...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு