3 மே, 2011

கிறிஸ்தவர்களின் குழந்தைகள் குட்டிச்சாத்தான்கள்! - 1

"கடவுளின் மக்களாகிய திருச்சபை தனது அமைப்பிலே திருச்சபை ஆட்சியாளர், பொது நிலையினர் எனும் இரு நிலைகளைக் கொண்டதாய்க் காணப்பெறுகின்றது" என்கிறார் கோட்பாட்டியல் பேராசிரியர் ஏ.எம்.லூர்துசாமி சே.ச. இங்கு, ஆண்டான் - அடிமை என்பதைத்தான் திருச்சபைக்கு உட்பட்டு ஆட்சியாளர் - பொதுநிலையினர் என்ற வார்த்தை ஜாலத்தால் குறிப்பிடுகிறார், என்றாலும் திருச்சபை ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற இரு நிலைகளைக் கொண்டதாய் இருப்பதை மட்டுமே இங்கு நாம் புரிந்துக்கொண்டால் போதுமானது. பொதுவாக ஒரு கிறிஸ்தவப் பெற்றோருக்கு பிறந்த குழந்தையை அதன் பிறப்பு முதல் இறப்பு வரை திருச்சபை தனது கீழ்கண்ட ஏழு அனுமானங்களைக் கொண்டு கட்டமைக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அவைகள் முறையே,
1. திருமுழுக்கு (ஞானஸ்நானம்), 2. ஒப்புரவு, 3.  நற்கருணை, 4. உறுதிபூசுதல், 5. குருத்துவம் அல்லது 6. திருமணம் மற்றும் 7. நோயில்பூசுதல். இதில் குருத்துவம் ஏற்பவர் ஆட்சி செய்பவராகவும், திருமணம் செய்பவர் ஆளப்படுபவராகவும் இருக்கிறார். முதலில் ஆட்சியாளர்களால் பொதுநிலையினருக்கு திருமுழுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது? என்பதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் திருச்சபை திருமுழுக்குக்கு சொல்லும் விளக்கம் என்ன? என்பதைக் காணலாம்.

திருமுழுக்கு:
கிறிஸ்தவப் பெற்றோர்கள் தனது குழந்தைக்கு பெயர் வைக்க திருமுழுக்கு என்னும் சடங்கை நிறைவேற்றுகிறார்கள். திருச்சபை வழக்கப்படி திருமுழுக்கு வேண்டி வருபவர்கள் வெள்ளை உடை, மெழுவர்த்தி மற்றும் பெற்றோரை அடுத்து குழந்தையை கிறிஸ்தவக் கட்டளைப்படி வளர்க்க உறுதியளிக்கும் ஒரு ஞானப்பெற்றோர் சகிதம் அச்சடங்குக்கு தயாராக கோயிலுக்கு செல்லவேண்டும். கோயிலில் ஒரு குழந்தைக்கு எவ்வாறு திருமுழுக்கு அளிக்கப்படுகிறது?
  • முதலில், குழந்தைக்கு பெற்றோர் வைக்க இருக்கும் பெயரை பாதிரியார் கேட்டுத் தெரிந்துகொள்வார்.
  • பின்னர் கிறிஸ்தவராக மாற திருமுழுக்கு பெற்றுக்கொள்ள குழந்தையின் பெற்றோருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வார்.
  • அடுத்து திருமுழுக்குப் பெறயிருக்கும் குழந்தையிடம் உள்ளப் பேயை விரட்ட பேய் ஓட்டும் செபத்தை பாதிரியார் செபிப்பார்.
  • திருமுழுக்கு பெறுவதற்கு ஆயத்தமாக மீட்பின் எண்ணெய் அக்குழந்தைக்கு பூசப்படும்.
  • தொடர்ந்து திருமுழுக்குப்பெறும் குழந்தையிடம் "பாவத்தை விட்டுவிடுகிறாயா?", "சாத்தானை விட்டுவிடுகிறாயா?" என்று பாதிரியார் கேட்பார். அதற்கு குழந்தையின் சார்பாக அதன் பெற்றோர் "விட்டுவிடுகிறேன்" என்று பதிலளிப்பார்கள்.
  • அதுவரையிலும் சென்மப் பாவியாக, சாத்தானின் பிள்ளையாக இருந்த அக்குழந்தை அதன் பிறகு கிறிஸ்தவக் குழந்தையாக, பேய் விரட்டப்பட்ட குழந்தையாக மாறுகிறது.
  • அதன் அடையாளமாக கிறிஸ்மா என்றொரு தைலம் பூசுவார்கள்.
  • பாவத்திலிருந்து விடுபட்டதற்கு அடையாளமாக குழந்தைக்கு வெள்ளை ஆடை அணியப்படும்.
  • இருளிலிருந்து ஒளிக்கு வந்ததற்கு அடையாளமாக மெழுகுவர்த்தி எரியச் செய்யப்படும்.
  • அதன் பிறகு குழந்தையின் காதுகள் திறக்கப்பட, வாய் பேச பாதிரியார் ஒரு மந்திரத்தை செபிப்பார்! பின்பு ஆசி வழங்கி திருமுழுக்கு நிறைவுபெறும்.
பொதுவாக கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை திருமுழுக்கு என்பது தனது குழந்தைக்கு பெயர்வைக்கும் விழா. அதனால் தான் இன்று உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் அனைவரையும் அழைத்து விருந்தளித்து மிக ஆடம்பரமான விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் திருமுழுக்கு என்பதற்கு திருச்சபை தரும் விளக்கமே வேறுவிதமாக இருக்கிறது. மேலே பார்த்தது போல, கிறிஸ்தவராக மாற விருப்பம் இருக்கிறதா என்று எதற்காக உறுதி ஏற்கச்செய்கிறார்கள்? யாதுமறியா பிஞ்சுக் குழந்தைக்கு ஏன் பேய் ஓட்டவேண்டும்? சென்மப்பாவம் என்றால் என்ன? என்பதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

பாசிஸ்ட்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு