கிறிஸ்தவர்களின் குழந்தைகள் குட்டிச்சாத்தான்கள்! - 2
கிறிஸ்தவம் ஆளுவோர் - ஆளப்படுவோர் என்ற இரு நிலைகளைக் கொண்டது என்றும், திருச்சபை உருவாக்கி வைத்திருக்கும் ஏழு அனுமானங்களால் கிறிஸ்தவன் கட்டமைக்கப்படுகிறான் என்றும், அதில் முதல் நிலையான திருமுழுக்கு எவ்வாறு கோயிலில் வழங்கப்படுகிறது என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். இனி, திருமுழுக்குப் பற்றி கிறிஸ்தவம் என்ன கூறுகிறது என்பதைக் காணலாம்.
திருமுழுக்கு எதற்காக?
"சென்மப் பாவத்தையும், கர்மப் பாவத்தையும் போக்கி, கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற அருட்சாதனம் திருமுழுக்கு" என்று வரையறுக்கிறது கிறிஸ்தவம். அதாவது, எந்தவொரு மனிதனும் இவ்வுலகில் பிறக்கும் போது சென்மப் பாவியாக பிறக்கிறான், அவன் கிறிஸ்தவனாக மாறவேண்டும் என்றால் அந்த சென்மப்பாவத்தை களைந்தவனாக இருக்க வேண்டும். திருமுழுக்குப் பெறாத எவரும் கிறிஸ்தவரல்ல. ஒருவர் எப்போது திருமுழுக்குப் பெறுகிறாரோ அதுமுதல் தான் அவர் கிறிஸ்தவராக திருச்சபையில் அங்கீகாரம் பெறுகிறார். அந்தவகையில் கிறிஸ்தவர் ஒருவருக்குப் பிறந்துவிடுவதால் மட்டும் ஒரு குழந்தை கிறிஸ்தவக் குழந்தையாக ஆகிவிடாது. இதைதான் "கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற" என்று கிறிஸ்தவம் மிகத்தெளிவாக கூறுகிறது.
சென்மப் பாவம் என்றால் என்ன?
முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் மூலம் உண்டாகி தொடர்ந்து இன்று வரைக்கும் மனிதர்கள் கூடவேப் பிறக்கும் பாவம் சென்மப் பாவம்!
அதாவது, ஆதாம் ஏவாள் மூலம் உண்டாகிய சென்மப்பாவத்தை போக்குவதும் திருமுழுக்கு தான்.அதற்கு அடையாளமாகத தான் இன்றுவரையிலும் திருமுழுக்கின் போது குழந்தையை பேய் பிடித்திருப்பதாகக் கூறி பேய் ஓட்டுகிறார்கள். பாவத்தை விட்டுவிடுகிறாயா? சாத்தானை விட்டுவிடுகிறாயா? என்று கேட்கிறார்கள். எண்ணெய் பூசுகிறார்கள், காது கேட்கவும், வாய் பேசவும் அருள் வழங்குகிறார்கள். ஆனால் பாவம் கிறிஸ்தவர்கள்! யார் யாரோ செய்த பாவங்களுக்கெல்லாம் இன்றும் தண்டனை அனுபவிக்கிறார்கள். என்னதான் கிறிஸ்தவம் கற்றுக்கொடுத்தது போல செபித்தாலும், புண்ணிய வாழ்வு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறப்பது என்னவோ குட்டிச்சாத்தான்கள் தான்! எந்தவொரு பெற்றோருமே தனது குழந்தைக்கு ஏன் பேய் ஓட்டவேண்டும் என்று கேட்பதில்லை. தான் பெற்றெடுக்கும் குழந்தை ஒரு பாவி என்று கிறிஸ்தவம் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். மூடநம்பிக்கை ஒரு மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கிறது!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் பாவங்கள் பெருகிவிட்டிருந்ததால் அப்பாவத்திலிருந்து மக்களை மீட்க கடவுளே மனிதனாக இயேசு என்னும் பெயரில் பிறந்ததாகவும், இறுதியில் அந்த கடவுளாகிய இயேசு இவ்வுலகத்தை பாவங்கள் அனைத்திலுமிருந்தும் மீட்டதாகவும் கிறித்தவம் கூறுகிறது. ஆனால், பாவம் அந்த கடவுளால் கூட இந்த ஆதாம் ஏவாள் செய்த பாவத்தை மட்டும் போக்க முடியவில்லை. அதனால் தான் இன்று பிறக்கும் குழந்தையும் சென்மப்பாவியாக பிறக்கிறது என்று இவர்களால் கூசாமல் புழுக முடிகிறது.
இயேசு பாவங்கள் அனைத்திலுமிருந்தும் மீட்டார் - சென்மப்பாவத்தை போக்க திருமுழுக்குப் பெறவேண்டும். ஏன் இத்தனைப் பெரிய முரண்பாடு?
கிறிஸ்தவர்கள் சிந்திக்க:
1. உங்கள் குழந்தை சென்மப்பாவத்தோடே பிறக்கிறது என்று திருச்சபை சொல்லுவதை நம்புகிறீர்களா?
2. உங்கள் குழந்தைக்கு அதன் மதத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது மதமே இல்லாமல் வாழவும் உரிமை உள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
3. அப்படியென்றால் திருமுழுக்கு என்பது உங்களை அடிமையாக்கி, திருச்சபை ஆட்சியாளர்களின் கட்டுக்குள் வைத்திருக்க ஏற்படுத்தியிருக்கும் ஒரு அனுமானம் என்பதை உணர்ந்துவிட்டீர்கள் தானே!
பாசிஸ்ட்
1 கருத்துகள்:
மனிதன் அதிகப் பட்சமாக சிந்திப்பதே பாவம் என நான் நினைக்கின்றேன். ஒருவேளை சிந்தனையே இல்லாமல் மிருகங்கள் போலே வாழ்ந்திருந்தால் - உலகமும் இன்று இப்படி கேவலமாக இருந்திருக்காது, பல விலங்குகள் நிம்மதியாக வாழ்ந்திருக்கும். பாழாய்ப் போன மனித இனம் உலகையே அழித்துவருகின்றது.. ஹிஹி !!!
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு