16 மே, 2011

ஜென்மப் பாவத்திலிருந்து கருமப் பாவத்திற்கு!

திருமுழுக்கின் வழியாக ஒரு குழந்தையின் பிறவிப் பாவம் மற்றும் அதன் மீதிருந்த பிசாசுகள் விரட்டப்பட்டு கிறிஸ்தவக் குழந்தையாக மாற்றப்படுகிறது. இனி திருமுழுக்கின் போது பாதிரியார் கேட்டுப்பெறும் உறுதிமொழியின்படி பெற்றோர் அக்குழந்தையை கிறிஸ்தவ நெறிப்படி வளர்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக கிறிஸ்தவம் வகுத்துள்ள அடுத்த அருள்சாதனமான ஒப்புரவு (பாவமன்னிப்பு) மற்றும் நற்கருணை வழங்கப்படும்.

பொதுவாக திருமுழுக்கிற்கும் ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனத்திற்குமிடையே கிட்டத்தட்ட 10 வருட இடைவெளி இருக்கிறது. ஒருவரை கிறிஸ்தவத்தில் நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டி பலவித அயோக்கியத்தனங்களையும் கடவுளின் பெயரால் உருவாக்கும் திருச்சபையின் ஆட்சியாளர்கள், அதனை மிக விரிவாகத் திட்டமிட்டு  கன கட்சிதமாக செயல்படுத்தும் காலக்கட்டம் இதுதான்.

ஒரு குழந்தை சரியாகப் பேசுவதற்கு முன்பு "மூக்க அறுத்துருவேனு சொல்லு, கொன்னுபுடுவேணு சொல்லு" என்று சைகை காட்டச்சொல்லி வேடிக்கை வன்முறையை கற்றுத்தரும் பெற்றோர்கள் கூடவே "ஏசப்பா பாரு, ஏசப்பாக்கு முத்தம் கொடு, கை கும்பிடு" என்று தங்களின் மத நம்பிக்கையையும்  குழந்தைக்கு கற்றுத்தருகிறார்கள். காலையில் உறங்கி எழும்போது, குளிக்கும் போது, சாப்பிடும் போது, பேருந்து புறப்படும் போது தொடங்கி இரவில் உறங்கச செல்லும் முன்பு வரை பிதா சுதன் பரிசுத்தஆவி அடையாளம் வரையவும்  கற்றுத்தருகிறார்கள். காலப்போக்கில் இவைகள் அனிச்சை செயலாகவும் மாறிவிடுகிறது. கோயிலுக்கு மத்தியில் சிலுவையில் தொங்கியபடி மிகக் குரூரமாக காட்சித்தரும் இயேசு குழந்தையின் பால்குடி மறக்கும் முன்னரே அதன் நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்படுகிறார்.

பள்ளிக்குச் செல்லும் பருவம் வருவதற்கு முன் அம்மாவின் இடுப்பிலோ அப்பாவின் தோளிலோ சவாரி செய்யும் குழந்தைகள்  பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பெற்றோரின் துணையின்றி கோயிலுக்குச் செல்லவும், அங்கு அவர்களின் வயதுக்கேற்றார் போல நடக்கும் குழுக்கள், இயக்கங்கள், சபை கூட்டங்களில் கலந்துக்கொள்ளவும் வற்புறுத்தப்படுகிறார்கள். மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் நடக்கும் மறைகல்வி என்னும் சமய வகுப்பில் கலந்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுபோக சிறுவர்கள் திருப்பலியின் போது பேசினாலோ, பக்கத்தில் விளையாடினாலோ அவர்கள் பாதிரியாரின் சாபத்திற்கு ஆளாவார்கள். சொல்பேச்சு கேட்காத குழந்தை சாத்தானின் குழந்தை எனவும், பாவி எனவும் அடையாளப்படுத்தபடுகிறது. மட்டுமல்லாமல் "வளர்ப்பு சரியில்லை" என்று அத்தனைபேர் முன்னாலேயும் அச்சிறுவர்களின்  பெற்றோர்களை பாதிரியார் அவமானப்படுத்துவார். சில நேரங்களில் சிறுவர்களுக்கு மண்டையில் குட்டும் கிடைக்கும். பலபேர் முன்பாக தானும் தன்னுடைய குழந்தைகளும் அவமானப்படுத்தப்படுவதை தவிர்க்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை அன்பாலும் அதட்டியும் அமைதியாக இருக்கும்படி பயிற்றுவிப்பார்கள்.

கோவிலில் பாதிநேரம் உறக்கமும், மீதிநேரங்களில் விளையாட்டுமாக இருக்கும் சிறுவர்கள் நாளடைவில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறார்கள். தனது வயதுக்கு சற்றே மூத்த சிறுவர்கள்  பாதிரியாருக்கு சமமாக கோயில் பீடத்திலே இருப்பதையும், பாதிரியார் பீடத்திற்கு வரும் போதும் போகும் போதும் திரைசீலையை தூக்கிப் பிடிப்பதையும், பாதிரியார் இருக்கையில் அமரும் போது நிற்கும் போது என்று அவர் செல்லும் திசைக்கெல்லாம் மின்விசிறியை திருப்புவதையும், அவருக்கு உதவியாக பீடத்திலே இருப்பதையும், மணி அடிப்பது, தூபம் காட்டுவது, காணிக்கைப் பொருட்களை வாங்கி வைப்பது என்று பல வேலைகள் செய்வதையும் பார்க்கிறார்கள். மேலும் திருப்பலியின் போது இயேசுவின் உடல் என்று கொடுக்கப்படும் கோதுமை அப்பத்தை ஒவ்வொருவரும் வரிசையில் நின்று வாங்கி அதை நோகாமல் பல் படாமல் பக்தி சிரத்தையோடு தங்கள் வாயில் போடுவதையும் கவனிக்கிறார்கள்.

இவைகளையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிறுவர்கள் தானும் தனக்கு மூத்தவர்களைப் போல பீடத்தில் நிற்கும் தகுதியைப் பெறவும், எல்லோரையும் போல வரிசையில் நின்று அப்பம் வாங்கும் தகுதியைப் பெறவும் கிறிஸ்தவம் கட்டமைத்துள்ள இந்த ஒப்புரவு மற்றும் நற்கருணை என்னும் அருள்சாதனங்களைப் பெற ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

தொடரும்...

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு