18 ஆக., 2011

மத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை!

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம், "காற்றாடிமலைக்  கடிதங்கள்" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக ஆசிரியர் "கானகத்துக் கவிக்குயில்" திரு.வெனிஸ் அவர்கள் எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய நண்பர் என்பதால் சற்றே ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின்பு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினாலென்ன? என்று மனதில் தோன்றியது. ஆனால், தான் ஒரு இறை மறுப்பாளனாக இருந்துக்கொண்டு இறை நம்பிக்கைக்கு உரமிடும் ஒரு புத்தகத்தை படித்து அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால் எப்படி எழுதுவது!

முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை மூட்டை மூட்டையாக பொய்யும் புனைவும் இருக்கும் ஒரு ஆன்மீகப் புத்தகத்திற்கு கண்டிப்பாக என்னால் திட்டி தான் எழுத முடியும். இன்று பொதுவெளியில் மதங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு சிதறு தேங்காய் போல சிதறடிக்கப்பட்டு விட்டன. மதங்கள் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் இவ்வாறு இருக்கும் போது, மறுபக்கமோ மனிதனை பக்குவப்படுத்த மதங்கள் தேவை என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மதங்கள் தேவை என்கிற கயவர்கள் தான், மதக்கலவரத்தை தூண்டி  விட்டு அதில் குளிர் காய்கிறார்கள். "மதம் மாறுவது மனித உரிமை" எனும் இருபத்தொன்றாவது நூற்றாண்டு காலச் சூழலிலும் கூட மதமாற்றங்களால் கொலைச் சம்பவங்கள் அநேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி அவர்கள் கண்களை குருடாக்கி விடுகிறது.

பதினெட்டாவது நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் - நட்டாலம் (குமரி மாவட்டம்) என்னும் கிராமத்தில் நாயர் சாதியில் பிறந்த நீலகண்ட பிள்ளை, மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை பின்பற்றுகிறார். இதனால் கோபம் கொண்ட அரசவை அந்தணர்கள், "மத துவேஷம் செய்கிறார்" என்று தேவசகாயம் பிள்ளை (நீலகண்ட பிள்ளை) மீது குற்றம் சுமத்தி அவரை பல வருடங்களாக பல்வேறு வகையில் சித்திரவதை செய்கிறார்கள். பல்வேறு கொடூரமான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டும், அந்தணர்களின் சொல்லுக்கிணங்க தனது தாய் மதத்திற்கு அவர் திரும்ப மறுத்து விடவே, இறுதியில் ஆரல்வாய்மொழி - காற்றாடி மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு துப்பாக்கி முனையில் படுகொலை செய்யப்படுகிறார் - இது வரலாறு.


அடிப்படை உரிமைகள், நீதிகள் மறுக்கப்பட்டு சாதியும் மதமும் கோலோச்சிய காலமாகிய பதினெட்டாவது நூற்றாண்டில், தன் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறிய ஒரு மனிதன், மதவெறியர்களின் தூண்டுதலால் படுகொலைச் செய்யப்படுவது என்பது சாதாரண நிகழ்வு தானோ? இருக்கலாம். இத்தகைய ஒரு வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது "காற்றாடிமலைக் கடிதங்கள்".

முதலில், புத்தக அமைப்பே சற்று புதுமையாகவும், வாசிக்க ஆர்வமாகவும் இருக்கிறது. அதாவது, தேன்மொழி என்ற சிறுமிக்கும் அவரது மாமாவுக்கும் இடையே நடக்கும் கடித வழி உரையாடல் தான் "காற்றடிமலைக் கடிதங்கள்".

புத்தகம் முழுவதிலும், இந்த வரலாற்று நிகழ்வின் கதாநாயகனாகிய தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறும்,  அதையொட்டிய கத்தோலிக்க விசுவாசமும், அதனால் தேவசகாயம் பிள்ளைக்கு கிடைக்க இருக்கும் புனிதர் பட்டம் பற்றிய தகவல்களோடும் விரிவாக உரையாடுகிறார்கள். முதல் அத்தியாயத்தில் வரலாற்று நிகழ்வை மிக அழகான செய்யுள் நடையில் எழுதியிருப்பது ஆசிரியரின் எழுத்தின் ஆளுமையைக் காட்டி நிற்கிறது. அதன் பின்னால் வரும் ஒவ்வொரு அத்தியாயங்களும் உரைநடை தொகுப்பாக அமைகிறது. ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் ஆசிரியரின் எழுத்து அவர்மேல் பொறாமைப்பட செய்கிறது.

அடுத்து, 
கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் இதுபோன்ற ரத்த சாட்சிகளை மறைசாட்சி அல்லது வேதசாட்சி என்று அழைக்கிறார்கள். தேவசகாயம் என்னும் வேதசாட்சியை பற்றி இங்கு படிக்கும் போது அவருக்காக புனையப்பட்டுள்ள பல நம்பிக்கைகள் நம்மையறியாமல் இயேசு கிறிஸ்துவை நினைவு படுத்துகிறது. காட்டாக, இயேசுவின் மரணத்தில் அவருக்கு உடலில் 5 காயங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இதையே காரணமாகக் கொண்டு பல புனிதர்களுக்கும் உடலில் 5 காயங்கள் இருப்பதாக புனைவது காலம்காலமாக நடந்துக் கொண்டிருக்கின்ற ஒரு வழக்கம். அந்த வகையில் தேவசகாயம் பிள்ளை 5 துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார் என்ற புனைவும் கூட அவருக்கு ஒளிவட்டம் உருவாக்க துணைபுரியலாமே தவிர அதில் உண்மைத் தன்மை இல்லை.

"இறந்த ஆட்டை உயிர் பெற செய்தார்" என்ற மூட நம்பிக்கைகளை எல்லாம் விசுவாசிகள் நம்புவார்கள்! இவை போன்ற பல்வேறுப்பட்ட இறை  நம்பிக்கைகளை கடந்து, தேவசகாயம் பிள்ளை சமூகத்திற்காக உழைத்தார் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காட்டாக, குமரி மாவட்டத்தில் சாதிய கொடுங்கோண்மைக்கு எதிராக தேவசகாயம் பிள்ளை குரல் எழுப்பினார் என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காரணம், வடக்கன் குளம் கோயிலிலே அவருடைய மதமாற்ற சடங்கின் போது ஞானத் தந்தையையாக வெள்ளாள உயர்சாதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் தான் நியமிக்கப்படுக்கிறார். ஒருவேளை சாதிக்கெதிராக செயல்பட்டாரென்றால் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து ஞானப்பெற்றோரை தேர்ந்தெடுத்திருக்கலாம். (வடக்கன்குளம் கோயிலில் வெள்ளாளர், நாடார், பறையர், இன்ன பிற சாதியினர் இருந்திருக்கிறார்கள். - ஆ.சிவசுப்ரமணியன் அவர்களின் "கிறிஸ்தவமும் சாதியும்")

இவ்வாறான  வரலாற்று கருத்து மாறுபாடுகள் சிலவற்றைத் தவிர்த்து, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு உரமிடும் புத்தகமாக இதைப் படிக்கலாம். தேவசகாயம் பிள்ளையின் பெயரால் நடைபெற்ற அற்புதங்களாக ஒரு பட்டியல் இருக்கிறது. பகுத்தறிவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை அவைகள்! 
மேலும், தமிழக, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் தாரளமாக படிக்கலாம்.

புத்தகம்: காற்றாடிமலைக் கடிதங்கள்
ஆசிரியர்: வெனிஸ், அருளன், பெரி.
வெளியீடு: அனல், நாகர்கோயில்.
விலை:ரூ.50/-

லேபிள்கள்:

6 கருத்துகள்:

22 ஆகஸ்ட், 2011 அன்று PM 6:30 க்கு, Blogger Venish Aj கூறியது…

m..nice to see..but i dont have time to negation on your opinion. wait........

 
8 செப்டம்பர், 2011 அன்று PM 2:21 க்கு, Anonymous Sugan கூறியது…

அற்புதமான, மற்றும் ஒரு நடுநிலமையான நூல் விமர்சனம்.

 
23 செப்டம்பர், 2011 அன்று PM 5:06 க்கு, Blogger குடிமகன் கூறியது…

நூல் விமர்சனம் அருமை.. ஆனாலும் புத்தகத்தை நிச்சயமாக படிக்கபோவதில்லை...

மதம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பது போலான உங்களுடைய கருத்திற்கு நான் முரண்படுகிறேன்..

உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்

ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன..

நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.. அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது.. பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன.. பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புகிறதாக தெரிகிறது... பேச்சாளர்கள் அனைவரும்.. பிராமண எதிர்ப்புகளை மட்டுமே பிரதானமாக பேசினர்.. கிராமத்து தலித் இன்னும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான்.. அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யவேண்டியதுதானே? அதைவிடுத்து.. திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம் கல்வியை கொடுத்து கிருதவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதாகது.. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை.. பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற பயம் என்னுள் உருவானது..

பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை இவர்கள் பரப்பவில்லை.. பெரியார் நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார்.... பிராமண அல்லது இந்து எதிர்ப்பை பரப்பும் இவர்கள்.. நீங்கள் குறிப்பிட்ட மதம் பிடித்த கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர்..

இங்கே மதம் மட்டுமே பிரச்சினை இல்லை..

 
24 செப்டம்பர், 2011 அன்று AM 11:01 க்கு, Blogger பாசிஸ்ட் கூறியது…

//மதம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பது போலான உங்களுடைய கருத்திற்கு நான் முரண்படுகிறேன்..//
//இங்கே மதம் மட்டுமே பிரச்சினை இல்லை..//

எப்படி முரண்படுகிறீர்கள் என்பதையோ மற்றும் இங்கே மதம் மட்டுமல்ல பிரச்னை என்றால் வேறு என்ன காரணங்கள் என்பதையோ குறிப்பிட்டுச் சொன்னால் விவாதிக்கலாம். கருத்திட்டமைக்கு நன்றி.

 
16 ஆகஸ்ட், 2016 அன்று PM 7:08 க்கு, Blogger kothandam கூறியது…

ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல் கொடுப்பார் என்று கூறி டிலினாய் தேவசகாயம் பிள்ளையை மதம் மாற்றினார். ஆனால் உண்மையில் டிலினாய் தன் மனைவி மகனை அல்பாயுசில் பரி கொடுத்துவிட்டு மனம்வெறுத்து தான் இறந்தார் அவரால் கிருஸ்துவ மதத்தை ஏற்ற தேவசகாயம் பிள்ளை மனம் வெறுத்து துன்பப்பட்டு தான் இறந்தார் ஆக.மொத்தம் ஏசு யாரையும் ரட்சிக்க.வில்லை அவரே தேவசகாயம் பிள்ளையைப்போல் அங்குள்ள மன்னரால் கொடுமையான முறையில் இறந்தார் தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசுநாதரால் எப்படை தன்னிடம் வருபவர்களுக்கு எப்படி இளைப்பாருதல் கொடுக்க முடியம்

 
16 ஆகஸ்ட், 2016 அன்று PM 7:08 க்கு, Blogger kothandam கூறியது…

ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல் கொடுப்பார் என்று கூறி டிலினாய் தேவசகாயம் பிள்ளையை மதம் மாற்றினார். ஆனால் உண்மையில் டிலினாய் தன் மனைவி மகனை அல்பாயுசில் பரி கொடுத்துவிட்டு மனம்வெறுத்து தான் இறந்தார் அவரால் கிருஸ்துவ மதத்தை ஏற்ற தேவசகாயம் பிள்ளை மனம் வெறுத்து துன்பப்பட்டு தான் இறந்தார் ஆக.மொத்தம் ஏசு யாரையும் ரட்சிக்க.வில்லை அவரே தேவசகாயம் பிள்ளையைப்போல் அங்குள்ள மன்னரால் கொடுமையான முறையில் இறந்தார் தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசுநாதரால் எப்படை தன்னிடம் வருபவர்களுக்கு எப்படி இளைப்பாருதல் கொடுக்க முடியம்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு