ஜெயலலிதாவின் பிரச்சார பீரங்கி சீமான்!
104 ஆண்டுகளுக்குப் பிறகு 13-06-2011 அன்று மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உணர்வை(!) புரிந்துகொண்ட ஈழத்தாயின் தமிழக அரசு இதன் தொடக்க விழாவை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பை எண்ணி எண்ணி புழங்காகிதமடைந்த சிங்கத்தமிழன் சீமான் தனது நாம் தமிழர் கட்சியின் சார்பாக விரிவான அறிக்கை ஒன்று வெளியிட்டு அதில் தமிழக அரசிற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும், "தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன?" என்று நினைக்கும் இந்திய அரசு இலங்கை அரசுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது என்றும், தமிழினத்தை கொன்றுக் குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவுகிறது என்றும் மத்திய அரசை ஒரு வாங்கு வாங்கிவிட்டார் வீரத் தமிழன் சீமான்.
தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து நடந்தால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்று பிரதம அமைச்சரிடம் கடிதம் கொடுத்த ஜெயலலிதா தினமும் சென்னை - கொழும்பு இடையே 5 பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை நடைபெற்றுக் கொண்டிருப்பதை மறந்துவிட்டார் போல. கப்பல் போக்குவரத்தால் மட்டும் தான் தமிழர்கள் உணர்வு பாதிக்கப்படும், ஆனால் விமானச் சேவையால் தமிழர் மனம் வியந்தோதும் என்று தமிழர்களின் கைநாடியை சரியாகவே கணித்து வைத்திருக்கிறார்! ஈழ தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட போது கொட நாட்டில் ஓய்வுக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் இப்போது தான் நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானம் கேலி கூத்தாக்கப்பட்டுவிட்டதால் மனம் கொள்ளாமல் தமிழர்கள் உணர்வு பாதிக்கபடுவதாக பிதற்றுவது மக்களை எந்த அளவிற்கு முட்டாள்களாக பார்க்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்ததை நன்றியுடன் வரவேற்ற சிங்கத் தமிழன் சீமான், விமானச் சேவையை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டு மேற்கண்ட அறிக்கையிலே ஒரு இடம் ஒதுக்காதது ஏன்? ஜெயலலிதாவின் தமிழக அரசு இலங்கை-க்கு பொருளாதாரதடை விதிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாக சித்தரிக்கும் சீமான், மத்திய அரசுடன் எல்லா வகையிலும் சேர்ந்து இணக்கமாகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் மம்மியின் தமிழக அரசை பாராட்டுவார்!, புகழ்வார்! ஏன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்துக் கிடந்து நன்றியும் சொல்லுவார். என்னே! ஒரு வீரத் தமிழன்.
எல்லா வகையிலும் கருணாநிதியை திட்ட வேண்டும், பழி போட வேண்டும், எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதாவிற்க்கும் மத்திய அரசைப் போல, "ஈழத் தமிழனும், தமிழக மீனவத் தமிழனும் செத்தால் என்ன, இருந்தால் என்ன?" என்ற மனப்பாங்கு தான் என்பது இந்த அசிங்கத் தமிழனுக்கு மட்டும் புரியாதோ?
படம்: google.com
லேபிள்கள்: அரசியல், கப்பல் போக்குவரத்து
2 கருத்துகள்:
I like it...
அற்புதமான, மற்றும் ஒரு நடுநிலமையான நூல் விமர்சனம்.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு