31 மே, 2011

பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள் - ஆமென்!

உறுதிபூசுதல் (Confirmation):
ஒருவரை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரபிரசாதங்களையும் கொடுக்கிற அருள்சாதனம் உறுதிபூசுதல் ஆகும். அதாவது மூவொரு கடவுளில் ஒருவராகிய பரிசுத்த ஆவியையும் அவருடைய வரபிரசாதங்களாகிய ஞானம், புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி மற்றும் தெய்வபயம் ஆகிய ஏழையும் பெற்று கிறிஸ்தவ மதத்தில் நிலைத்து நிற்கும் உறுதியை ஏற்பது தான் இந்த அருள்சாதனம். திருமுழுக்கு, பாவமன்னிப்பு, நற்கருணை ஆகிய மூன்று அருள்சாதனங்களையும் பெற்றவர்கள் தான் இதை பெற முடியும். இந்தவொரு அருள்சாதனம் மட்டும் ஆயரால் (பிஷப்) வழங்கப்படும். 

உறுதிபூசுதல் (Confirmation)

எவ்வாறு வழங்கபடும்?
வழக்கமான திருப்பலியின் மத்தியில் உறுதிபூசுதல் பெற இருப்பவர்களிடம் ஆயர் கேள்விகள் கேட்பார்.

ஆயர்: பசாசை விட்டுவிடுகிறீர்களா? அதன் மாயக் கவர்ச்சியை விட்டுவிடுகிறீர்களா?
எல்லோரும்: விட்டுவிடுகிறேன்.

ஆயர்: வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: அவருடைய ஒரே மகனும் கன்னிமரியாளிடமிருந்து பிறந்து  பாடுபட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தந்தையின் வலது பக்கம் இருப்பவருமான இயேசு கிறிஸ்துவை  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

ஆயர்: கத்தோலிக்க திருச்சபையையும், புனிதர்களின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும்  விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல்லோரும்: ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு மேற்கண்ட கத்தோலிக்க  கிறிஸ்தவத்தின் நம்பிக்கைகளை எல்லோரும் 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று உறுதி ஏற்றுக்கொள்வார்கள். 

அதன் பின்னர் உறுதிபூசுதல் பெற இருப்பவரின் தோளில் ஞானப் பெற்றோர் கை வைக்க, ஆயர் "பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள்" என்று கூறி அவர்களின் நெற்றியில் ஒரு தைலம் கொண்டு சிலுவை அடையாளம் வரைவார். பெறுபவர் ஆமென் என்று சொல்லுவார்.

நற்கருணை மற்றும் உறுதிபூசுதல் போன்ற அருள்சாதனங்கள் பெறுவதற்கு முன் தயாரிப்புக்கான பாடத்திட்டங்கள் உள்ளன. அவற்றைப் படித்து தேர்ச்சி பெற வேண்டும். (தேர்ச்சி பெறாவிட்டாலும் வழங்கப்படும். ஆனால் வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.) இரண்டொரு மாதங்கள் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் நடத்துவதால் சிறுவர்கள்  அவற்றை உள்வாங்கிப் படித்து கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்றியே வளருகிறார்கள், வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். இதுதவிர வாரம் தவறாமல் திருப்பலியும், மறைக்கல்வி என்னும் சமய வகுப்பும் கட்டாயம் என்பதால் அவர்கள் நம்பிக்கையை அவ்வளவு எளிதில் அசைத்து விடக் கூடியதல்ல. அதுவே கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் கிறிஸ்தவ கட்டமைப்பின் வெற்றியும் கூட.

படம்: google.com


லேபிள்கள்: , ,